Thursday, October 20, 2016

காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?


 Image result for ப்ரியா தம்பி
இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண்களுக்கு பதினாறு வயதுக்கு மேல் செய்வதற்கு உருப்படியாய் ஒன்றும் இல்லாதது. நல்ல படிப்பு, வேலை ஆகிய வாய்ப்புகள் அமையும் போது பெண்களின் காதல் ஆர்வமும் குறைகிறது. இந்த கோணத்தில் இருந்து தான் ப்ரியா தம்பி எழுதுகிறார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் – தனி வழி!

Image result for ravichandran ashwin

ரவிச்சந்திரன் அஷ்வின் மிக குறைந்த ஆட்டங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அது மட்டுமல்ல 50, 100, 150 விக்கெட்டுகள் என ஒவ்வொரு மைல்கல்லையும் மிக குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் சாதித்தவர் அஷ்வின். அவர் சீறிப் பாய்கிற வேகத்தை பார்த்தால் தன் முன்னோடியான ஹர்பஜனை அடுத்த ஐந்து வருடங்களில் தாண்டி சென்று விடுவார் எனத் தோன்றுகிறது. ஹர்பஜனின் விக்கெட் எண்ணிக்கை 417. அப்படியானால் அஷ்வின் ஓய்வு பெறும் போது அவர் இந்தியாவின் சிறந்த சுழலர்களில் அனில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக மட்டுமே இருப்பார். தாமதமாக சுழல் பந்தை தேர்ந்தெடுத்து ஆடத் துவங்கிய போது அஷ்வினே தான் இப்படியான சிகரங்களை தொட முடியும் என நம்பி இருக்க மாட்டார்.

Tuesday, October 18, 2016

சாக்ரடீஸ் - காந்தி - இன்றைய வலதுசாரிகள்


வேலம்மாள் பொறியல் கல்லூரியின் விவாத போட்டிக்கு நடுவராக சென்ற போது எடுத்த படம் இது. விவாதத்தில் வெல்ல தர்க்கம் எவ்வளவு முக்கியம், தர்க்க ரீதியாய் எதிராளியை முறியடிக்க முடியாத போது என்னவெல்லாம் தந்திரங்கள் பிரயோகிக்கலாம், ஒரு விவாதத்தின் மைய தர்க்கம், இரண்டாம் நிலை தர்க்கங்கள் என்னென்ன என விளக்கினேன்.


முக்கியமாய் ஒரு விவாதத்தில் வெற்றி தோல்வி இறுதியானது அல்ல. அது தனிப்பட்ட வீழ்ச்சியோ எழுச்சியோ அல்ல. ஒரு விவாதத்தில் எதிர்தரப்பை முறியடிக்கும் போது அல்லது எதிர்தரப்பால் நாம் முறியடிக்கப்படும் போது ஒரு கருத்தியலோ தத்துவமோ மேலும் கூர்மையாகிறது, வலுப்பெறுகிறது.

Saturday, October 8, 2016

இறுதி யாத்திரை

Image result for mt vasudevan nair
“இறுதி யாத்திரை” எம்.டி வாசுதேவன் நாயரின் அதிகம் பேசப்படாத ஒரு நாவல். தமிழில் சமீபத்தில் கே.வி ஷைலஜாவின் மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக பிரசுரமாய் வெளியாகி உள்ளது. இந்நாவல் குறித்து பேசும் முன் எம்.டி என்ன மாதிரியான எழுத்தாளர், அவரது இடம் என்ன என காண்போம்.
எம்.டி வாசுதேவன் நாயர் மலையாள நவீன இலக்கியத்தின் ஒரு சிறந்த ஸ்டைலிஸ்ட். சுருக்கமான விவரணைகள், நுணுக்கமான பார்வை, மிக மென்மையான உணர்வுகள் (மரணத்தின் இழப்பை கூட அடங்கின தொனியில் ஒரு கசப்பாக வெளிப்படுத்தும் பாங்கு), கவித்துவம், சம்பவங்கள் மற்றும் மனிதர்களுடன் ஒரு விலகின அணுகுமுறை கொண்ட மைய பாத்திரம், நகைமுரண், நிறைவின்மை, அதிருப்தி ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்றி சுற்றினால் அது தான் எம்.டியின் மொழி.

Tuesday, October 4, 2016

சைக்கிள் கமலாவின் தங்கை

Image result for ஞானக்கூத்தன்

”சைக்கிள் கமலாவின் தங்கை” இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எஸ்.ராவின் semi-fictional சிறுகதை. இதில் ஞானக்கூத்தன் நேரடியாகவே வருகிறார். அவர் கா.ந.சு பற்றி பேசுகிறார். ஞானக்கூத்தனின் கவிதையில் இருந்து சைக்கிள் ஓட்டும் பெண் பாத்திரமான கமலாவின் தங்கையும் வருகிறார். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் நடுவிலானது இக்கதை. கிட்டத்தட்ட அஞ்சலிக்குறிப்பு. சிறுகதைக்கும் அஞ்சலிக்கும் இடையிலான இந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது.

நாளிதழ்களின் எதார்த்தம்

Image result for reporter cartoon

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திக்கட்டுரைகள், துணுக்குகள், புகைப்படங்கள், வாழ்க்கைத்தகவல்கள், ஆளுமைகள் தம் வாழ்வை பற்றி பேசும் பேட்டிகள். இவ்வளவையும் சுவாரஸ்யமாய் படித்து கடந்த பின் ஒரு ஜனநெரிசலான தெரு வழி நடந்து வீட்டுக்கு வந்தது போல் இருக்கிறது. ஒன்று கூட நினைவில் தங்குவதில்லை. ஆனால் நாம் உறங்கும் போதும் விழிக்கும் போதும் நாளிதழ்கள் எந்திரம் போல் தகவல்களை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஏன் பேட்டிகள், வாழ்க்கை குறிப்புகள், சமூக சித்திரங்கள் கூட நமக்கு உண்மையாய் தெரிவதில்லை? ஏன் மூவாயிரம் பேர் படிக்கும் சிறுபத்திரிகை கதை ஒன்று மனதுக்கு அவ்வளவு நெருக்கமாய் தோன்றுகிறது?
 காரணம் ஒன்று தான். தினப் பத்திரிகைகள் செய்தியை மிகவும் கராறாய் தர முயல்கின்றன. அப்போது அதில் உள்ள உண்மை செத்து விடுகிறது. உதாரணமாய், ஜாம்பஜார் சாலையில் உள்ள 42 குப்பைத் தொட்டிகளில் 31 எப்போதும் நிரம்பி வழிகிறது எனும் செய்தியில் தகவல் தான் இருக்கிறது. உண்மை இல்லை.

”அகல்யா” சிறுகதை குறித்து...

எனது அகல்யா” சிறுகதை குறித்து சத்யானந்தன் தன் பிளாகில் எழுதியுள்ள விமர்சனம் இது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
ஆர். அபிலாஷின் சிறுகதைஅகல்யா
சமகால களன் கள், கரு, சூழல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது அனேகமான தமிழ் எழுத்தாளர்களுக்கு. பல காலமாக இருந்து வரும் பிரச்சனைகளை நூறாவது முறையாக எழுதுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதற்கு இணையாகப் பிடித்தது சமகால எழுத்துக்கள் எதுவுமே சரியில்லை என்று சுமார் முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் போய் விடுவது அல்லது தன் எழுத்துக்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வது.
ஆர். அபிலாஷ் விதிவிலக்காக அனேகமாக எழுத்தாளர்கள் தொடாத ஒரு கதைக்களனை எடுத்துக் கொண்டிருக்கிறார். சமகால ஆண் பெண் உறவுச் சிக்கல்கள். உண்மையில் நம் எழுத்தாளர்களுக்கு முற்றிலும் தெரியாத களன் இது இல்லையா. அபிலாஷ் மிகவும் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் திராநதி செப்டம்பர் 2015 இதழில் அகல்யா என்னும் சிறுகதையில்.

“ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக”


இம்மாத உயிர்மையில் வெளிவந்துள்ள “ஆணுறைகள் வாங்குவது தொடர்பாக” எனும் மனுஷ்யபுத்திரன் கவிதை நீண்ட நேரம் என் நினைவில் இருந்து நீங்க மறுத்தது. அதில் ஒரு இளம் பெண் சூப்பர் மார்க்கெட்டில் நீண்ட நேரமாய் அவஸ்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஆணுறை ஒன்று வாங்க வேண்டும். ஆனால் யார் கண்ணிலும் படாமல் வாங்க வேண்டும். விலைப்பட்டியல் போடும் போது அது தனியாய் தெரியக் கூடாது என தேவையற்ற சில பொருட்களையும் சேர்த்து வாங்குகிறாள். அவளுக்கு ஒரு ஜோடி அரவணைத்து நிற்கும் படம் கொண்ட ஆணுறை பாக்கெட் வாங்க ஆசை. ஆனால் கூச்சப்பட்டு படம் இல்லாத பாக்கெட் ஒன்றை தேர்வு செய்கிறாள். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை போடும் பெண் ஆணுறை பாக்கெட்டை வேறு எல்லா பொருட்களையும் போன்று அக்கறையின்றி கையாள்கிறாள். அவள் கையில் பொருட்களின் பையுடன் அபரிதமான சுதந்திரத்துடன் வெளியே வீதியில் இறங்குகிறாள்.

Monday, October 3, 2016

அருந்ததி ராயின் அடுத்த நாவல்

Image result for arundhati roy
அருந்ததி ராயின் அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness வெளிவரும் செய்தி ஆங்கில ஹிந்து நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தியாக வந்துள்ளது. அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்: “வாழ்வுடா!”

Wednesday, September 28, 2016

மனம் இணைய இதழில் என் பேட்டி

உங்களது இலக்கியப் பயணம் எந்த இடத்தில் தொடங்கியது?
என்னுடைய எழுத்துப் பயணம் என்பது எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. நான் அறிவார்ந்த ஆள் கிடையாது. முழுக்க உணர்ச்சிகளின் உலகத்தில்தான், நான் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறேன். சுமார் பதினான்கு வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிறகு, சிறுகதைகளை எழுதிப் பார்த்தேன். அப்போது, கட்டுரைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. அப்படியாக வளர்ந்து வருகிறபோதுதான், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உடனான நட்பு கிடைத்தது. அப்போது எனக்கு மொழிபெயர்ப்பில் பெரிய ஆர்வம் இருந்தது. சில மொழிபெயர்ப்பு கவிதைகளை எழுதிக்கொண்டுபோய், அவரிடம் காண்பித்தேன். அதைப் படித்த மனுஷ்யபுத்திரன், அதைப் பதிப்பிக்கலாம் என்று சொன்னார். ஆனால், சில காரணங்களால் அது பதிப்பிக்க முடியாமல் போனது. இந்த சமயத்தில்தான், உயிரோசை என்கிற இணையதளத்தை மனுஷ் ஆரம்பித்தார். அதில் நிறைய புதுமுக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்படி, அதில் எழுத எனக்கும் வாய்ப்பளித்தார். அங்கேதான், ஒரு கட்டுரையாளனாக நான் உருவானேன். தொடர்ச்சியாக எழுத எழுத, அதன்மேல் ஒரு தீவிரமான ஈடுபாடு வந்துவிட்டது. இதுதான், பின்னாட்களில் ஒரு நாவலாசிரியனாக உருவாகக் காரணமாக அமைந்தது!